உதகையில் சுதந்திர ஓட்ட நிகழ்ச்சி: மாணவ, மாணவிகள் பங்கேற்பு
உடற்தகுதியின் சுதந்திர ஓட்டத்தை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை சென்னை மண்டல இயக்குனர் காமராஜ் தொடங்கி வைத்தார்.;
மத்திய அரசின் இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் கீழ் செயல்படும் நேரு யுவகேந்திரா மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நீலகிரி மாவட்ட பிரிவு சார்பில், பிட் இந்தியா என்ற உடற்தகுதியை மேம்படுத்திக் கொள்ள சுதந்திர ஓட்ட நிகழ்ச்சி உதகை தாவரவியல் பூங்கா சாலையில் நடைபெற்றது.
உடற்தகுதியின் சுதந்திர ஓட்டத்தை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை சென்னை மண்டல இயக்குனர் காமராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். வலுவான மற்றும் திறமையான நாடு மற்றும் ஒரு சுறுசுறுப்பான தன்னம்பிக்கை உள்ள சமூகத்தை உருவாக்க நாள்தோறும் உடற்பயிற்சி மேற்கொள்வோம் என உடற்பயிற்சியின் அவசியத்தை குறித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
எச்.ஏ.டி.பி. மைதானம் முன்பு இருந்து தொடங்கி சேரிங்கிராஸ் சந்திப்பு, மதுவானா சந்திப்பு வழியாக மீண்டும் மைதானம் வரை ஓட்டம் நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் அலுவலர் சஞ்சய் செட்டே, மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயச்சந்திரன் கலந்து கொண்டனர். நவீன காலத்தில் இளைஞர்கள் தங்களது உடற்தகுதியை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுதந்திர ஓட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.