உதகையில் போக்சோ சட்டத்தின் கீழ் இருவர் கைது
உதகை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், 17 வயதான 2 சிறுவர்கள், போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளிகள் இருவரின் 17 வயதான 2 மகன்கள், அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தனர். அவர்களுக்கு, மற்றொரு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் 2 மாணவிகளுடன் பழக்கம் ஏற்பட்டது. இது, நாளடைவில் காதலாக மாறியது. இது, சிறுமிகள், மாணவர்கள் பெற்றோருக்கு தெரிய வரவே, அவர்களை பெற்றோர்கள் கண்டித்தனர்.
இந்நிலையில், கடந்த 17-ந் தேதி, பிளஸ்-2 மாணவிகளிடம் ஆசை வார்த்தை கூறி, 2 மாணவர்களும் பள்ளிச்சீருடை அணிந்தபடி மேட்டுப்பாளையத்துக்கு அழைத்து சென்றனர். பள்ளிக்கு சென்ற மாணவிகள் வீடு திரும்பாததால், பெற்றோர் தேடி பார்த்தனர். தொடர்ந்து, ஊட்டி நகர மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், போலீசார் சிறுமிகளை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இதனிடையே, மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில், பள்ளி சீருடையில் 4 பேர் சந்தேகத்துக்கு இடமாக இருந்ததை பார்த்து, ஊழியர்கள் சைல்டு லைன் உதவி மையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதை அறிந்த உதகை போலீசார், 4 பேரையும் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில், மாணவிகளை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, மாணவர்கள் அழைத்துச் சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக, உதகை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் 17 வயதான 2 சிறுவர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.