நீலகிரியில் முதல் முறையாக திருநங்கை வழக்கறிஞர்: கலெக்டர் பாராட்டு
நீலகிரியில் முதல் முறையாக திருநங்கை வழக்கறிஞராக உள்ள சவுமியா சாசுக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்துள்ளார்.;
உதகை காந்தல் குருசடி காலனி பகுதியை சேர்ந்தவர் திருநங்கை சவுமியா சாசு. இவர் கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை திருச்சியில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பு பயின்று முடித்தார். தொடர்ந்து தமிழ்நாடு பார் கவுன்சிலில் பதிவு செய்து வழக்கறிஞராக பயிற்சி பெற உள்ளார்.
நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யாயை சந்தித்து பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பணியாற்ற பதிவு செய்ததை காண்பித்து வாழ்த்து பெற்றார். இவருக்கு கலெக்டர் தனது பாராட்டை தெரிவித்தார். அப்போது சமூக நல அலுவலர் (பொறுப்பு) தேவகுமாரி உடனிருந்தார்.
இதுகுறித்து திருநங்கை சவுமியா கூறுகையில், முதல் முறையாக நான் தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பு பயின்று பார் கவுன்சிலில் பதிவு செய்து உள்ளேன்.
வழக்கறிஞராக பணியாற்ற உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் திருநங்கைகளை வழிநடத்துவதோடு, 5 ஆண்டுகள் பயிற்சி பெற்று அனைத்து மக்களுக்கும் சமூக சேவை புரிவேன் என்றார். நீலகிரியில் முதல் முறையாக திருநங்கை வக்கீல் ஆகியிருப்பது குறிப்பிடத்தக்கது.