உதகையில் பழங்குடியினருக்கான பயிற்சி வகுப்புகள்
மின்னணு முறையில் 3 லட்சம் மூலிகைகள் பதிவு செய்யப்பட்டு அரசு காப்புரிமை பெற்றுள்ளதாக அதிகாரிகள் தகவல்.;
ஆஸாதிக்கா அம்ரித் மஹாத்சவ் விழாவின் ஒரு பகுதியாக மத்திய பழங்குடியின அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிட மற்றும் பழகுடியினர் நலத்துறை சார்பில் உதகையில் பழங்குடியின இளைஞர்களுக்கான மூலிகை மருத்துவ செடிகள் குறித்த ஒரு நாள் பயிலரங்கம் நடைபெற்றது.
பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் ஏற்பாடு செய்திருந்த இந்த பயிலரங்கை மாவட்ட ஆட்சி தலைவர் பொறுப்பு வகிக்கும் கீர்த்தி பிரியதர்ஷினி முன்னிலையில் மாநில திட்ட குழு உறுப்பினரும் முதன்மை சித்த மருத்துவருமான சிவராமன் தொடங்கி வைத்தார். நீலகிரி மாவட்டத்தில் வாழும் ஆறு பூர்வீக பழங்குடி மக்களின் பல்வேறு உற்பத்தி பொருட்களுக்கு இடைத்தரகர் தலையீட்டின்றி சந்தைப்படுத்த பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்திய அரசு பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், ஒரு லட்சத்திற்கு மேலான சித்த மற்றும் 3 லட்சம் மூலிகைகள் மின்னணு முறையில் பதிவு செய்யப்பட்டு அரசு காப்புரிமை பெற்றுள்ளதாக கூறினார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடி மக்களை தாக்கி வரும் சிக்கிள் செல் அனீமியா என்ற அரிய வகை ரத்த சோகை நோயை கட்டுப்படுத்தும் முயற்சியாக பழங்குடியின மக்களுக்கு நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும்.
அரிசிக்கு பதிலாக ராகி வழங்க வேண்டுமென அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பொறுப்பு வகிக்கும் கீர்த்தி பிரியதர்ஷினி கூறினார். நிகழ்ச்சியில் பழங்குடியினர் ஆராய்ச்சி மைய இயக்குநர் உதயகுமார் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.