தொடர் விடுமுறையால் ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலாப் பயணிகள் மிதி படகு, துடுப்புப் படகு, மோட்டார் படகுகளில் சவாரி செய்து மகிழ்ந்தனர்.

Update: 2021-10-16 09:30 GMT

படகு இல்லத்தில் சவாரி செய்து மகிழும் சுற்றுலா பயணிகள்.

ஆயுத பூஜை, விஜயதசமியை ஒட்டி தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இந்த விடுமுறையை குளு, குளு காலநிலை நிலவும் ஊட்டியில் கழிக்கவும், 2-வது சீசனை அனுபவிக்கவும் சுற்றுலாப் பயணிகள் குவிந்து உள்ளனர்.

கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வந்த வண்ணம் இருக்கின்றனர். இதனால் சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் மலர் மாடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்ட 12 ஆயிரம் பூந்தொட்டிகளில் பூத்துக் குலுங்கிய மலர்களை கண்டு ரசித்தனர். 2-வது சீசனில் 20 ரகங்களை சேர்ந்த 5 ஆயிரம் பூந்தொட்டிகள் கண்ணாடி மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது.

இதனை பார்வையிட்டதுடன், புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இத்தாலியன் பூங்கா, ஜப்பான் பூங்கா, இலை பூங்கா அலங்கார வேலிகள் முன்பு செல்பி எடுத்து உற்சாகமடைந்தனர். ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலாப் பயணிகள் மிதி படகு, துடுப்புப் படகு, மோட்டார் படகுகளில் சவாரி செய்தனர். சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து இருந்ததால் நுழைவுக் டிக்கெட் பெற நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மோட்டார் படகுகளில் சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் காத்திருந்தனர்.

அதேபோல் ஊட்டி ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, கர்நாடகா தோட்டக்கலை பூங்கா, பைக்காரா படகு இல்லம், சூட்டிங்மட்டம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. தொடர் விடுமுறையால் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் தங்கும் விடுதிகள் நிரம்பி வருகின்றன.

Tags:    

Similar News