உதகை ரோஜா பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
எதிர்வரும் 14, 15 ஆகிய இரு தினங்கள் உதகை அரசு ரோஜா பூங்காவில் 17வது ரோஜா கண்காட்சி நடைபெற உள்ளது.;
நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா துவங்கியுள்ள நிலையில் சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் அனைத்து சுற்றுலா தளங்களும் களைகட்டியுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பின் நீலகிரியில் நேற்றைய தினம் கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் துவங்கிய கோடைவிழா மாத இறுதி வரை நடைபெறுகிறது ஒவ்வொரு சுற்றுலா தளங்களில் நடைபெறும் கண்காட்சிகளுக்காக அந்தந்த சுற்றுலாத்தலங்களில் அனைத்து ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கோடை விழாவின் ஒரு பகுதியாக எதிர்வரும் 14, 15 ஆகிய இரு தினங்கள் உதகை அரசு ரோஜா பூங்காவில் 17வது ரோஜா கண்காட்சி நடைபெற உள்ளது. இதற்காக பூங்காவில் ஏராளமான வண்ணங்களில் சுமார் நான்காயிரம் ரக ரோஜாக்கள் பூத்துக் குலுங்குவதை ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.
ரோஜா பூங்காவில் நடைபெறும் ரோஜா கண்காட்சிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் ரோஜா பூங்காவிற்கு அதிகாலை முதலே சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. பூங்காவில் உள்ள ரோஜாக்களை கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள் புகைப்படங்கள் செல்பி எடுத்து மகிழ்கின்றனர். மேலும் நிலா மாடம், புல் மைதானம், நீரூற்று, போன்ற இடங்களைக் கண்டு ரசித்து வருகின்றனர். தோட்டக்கலைத்துறை சார்பில் ரோஜா கண்காட்சிக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்துவரும் ரோஜா பூங்காவில் விதவிதமாக பூத்துள்ள ரோஜாக்களை அனைவரும் பார்த்து ரசித்து வருகின்றனர்.