உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்: படகு சவாரி செய்து உற்சாகம்

விடுமுறை நாள் என்பதால், உதகை பைக்காரா படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள், படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்

Update: 2021-09-18 10:35 GMT

உதகை பைக்காராவில், படகில் உற்சாகமாக பயணம் மேற்கொண்ட சுற்றுலாவாசிகள்.

உதகை அருகே,  தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் பைக்காரா படகு இல்லம் செயல்பட்டு வருகிறது. விடுமுறை நாளான இன்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து இருந்தது.

இங்கு சவாரி செய்வதற்காக 8 இருக்கைகள் மற்றும் 10 இருக்கைகள் கொண்ட மோட்டார் படகுகள், அதிவேக படகுகள் என மொத்தம் 24 படகுகள் உள்ளன. மோட்டார் படகுகளில் சுற்றுலா பயணிகள் சவாரி செய்து மகிழ்ந்தனர். சவாரியின்போது எழில் மிகுந்த அணை, வனப்பகுதி மற்றும் காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளை நேரில் பார்வையிட்டனர்.

தண்ணீரை கிழித்துக்கொண்டு சீறியபடி சென்ற  அதிவேக படகில், சுற்றுலா பயணிகள் சவாரி செய்து குதூகலம் அடைந்தனர். 3 அதிவேக படகுகள் மட்டும் இருந்ததால், சவாரி செய்வதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்திருந்தனர். பைக்காரா அணையின் இயற்கை அழகு பின்னணியில் சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

முன்னதாக, சுற்றுலா பயணிகள் அனைவருமே, உடல் வெப்பநிலை பரிசோதனை செய்த பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். முழு ஊரடங்குக்கு பின்னர்,  கடந்த 23-ந் தேதி முதல்,  இதுவரை பைக்காரா படகு இல்லத்துக்கு 8 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News