உதகையில் தக்காளி, வெங்காயம் விலை கிடு கிடு உயர்வு

தொடர் மழை காரணமாக காய்கறி வரத்து குறைந்துள்ளதால் விலையேற்றம் உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Update: 2021-10-20 10:17 GMT

உதகை மார்க்கெட்டில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள காய்கறிகள். 

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக விளைநிலங்களில் மண் ஈரப்பதமாக உள்ளது. அதேபோல் சமவெளிப் பகுதிகளிலும் தொடர் மழை காரணமாக காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் நீலகிரிக்கு காய்கறிகள் வரத்து குறைந்து உள்ளது. அதன் காரணமாக காய்கறிகள் விலை உயர்ந்து வருகிறது.

கர்நாடகா மாநிலம் மைசூருவில் இருந்து தக்காளி, பெரிய வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் தினமும் விற்பனைக்கு லாரிகளில் கொண்டு வரப்படும். தொடர் மழையால் 2 நாட்களுக்கு ஒரு முறை விற்பனைக்கு வருகிறது. இதனால் தக்காளி, பெரிய வெங்காயம் விலை 2 மடங்காக உயர்ந்து உள்ளது.

மேலும் டீசல் விலை உயர்வால் சரக்கு வாகனங்களின் வாடகை கட்டணம் உயர்ந்து உள்ளது. இதனால் மேலும் காய்கறிகள் விலை உயரும் அபாயம் இருக்கிறது. இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, தொடர் மழை காரணமாக உதகை நகராட்சி மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து குறைந்து உள்ளது.

இதனால் காய்கறிகள் விலை அதிகரித்து வருகிறது. ஒரு கிலோ கேரட், பீட்ரூட் ரூ.40 முதல் ரூ.50 வரை, முட்டைகோஸ் ரூ.20, உருளைக்கிழங்கு ரூ.30, வெண்டைக்காய் ரூ.40, கத்தரிக்காய் ரூ.40, பூண்டு ரூ.80 முதல் ரூ.100 என விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.20-க்கு விற்பனையானது. தற்போது ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் கிலோ ரூ.50-க்கு விற்பனையாகிறது என்றனர்.

Tags:    

Similar News