உதகையில் தோடர் இன மக்களின் ஆருத்ரா தரிசன தேர் திருவிழா
கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாய் நடைபெறாமலிருந்த ஆருத்ரா தரிசன தேர் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடிய தோடர் இன மக்கள்
உதகையில் ஆண்டுதோறும் பழங்குடியின தோடர் இன மக்களால் கொண்டாடப்படும் பவானீஸ்வரர் திருக்கோயில் 110 ம் ஆண்டு ஆருத்ர தரிசன தேர்த்திருவிழா இன்று நடைபெற்றது. தோடர் இன மக்கள் பாரம்பரிய உடையணிந்து நடனம் ஆடி உற்சாகமாக கலந்து கொண்டனர்...
உதகை அருகே உள்ள முள்ளிக் கொரை பகுதியில் தோடர் இன பழங்குடி இன மக்கள் வழிபட்டுவரும் பவானீஸ்வரர் திருக்கோவில் தேர் திருவிழாவானது ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் நடைபெறும். உலக மக்கள் அனைவரும் நலமுடன் வாழவும் ஆண்டு தோறும் மகிழ்ச்சி, மற்றும் உற்சாகத்துடன் இருக்க வேண்டுதலோடு தோடரின மக்கள் இவ்விழாவை கொண்டாடி வருகின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக நடைபெறாமல் இருந்த இந்த தேர்பவனி ஆனது இந்த ஆண்டு நடைபெற்றது. முள்ளிக் கொரை திருக்கோவிலில் இருந்து புறப்பட்ட தேர்பவனியை நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் வடம் பிடித்து துவக்கி வைத்தார்.
தேர் பவனியில் கலந்து கொண்ட தோடர் இன மக்கள் பாரம்பரிய உடை அணிந்து கலாச்சாரப்படி பாடல்களைப் பாடி, நடனமாடி தேர் பவனியில் கலந்து கொண்டனர். நகரில் உலா வந்த தேர்பவனியில் பவானீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதனைத் தொடர்ந்து உதகை ஸ்ரீ மாரியம்மன், காளியம்மன் திருக்கோவில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மாரியம்மன் கோவில் பகுதியில் தோடர் இன மக்கள் பாரம்பரிய உடை அணிந்து கலாச்சாரம் நடனம் ஆடினர்.
இதனை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.