முழு ஊரடங்கால் வெறிச்சோடியது சுற்றுலா நகரமான ஊட்டி

முழு ஊரடங்கு காரணமாக சுற்றுலா நகரமான ஊட்டி வெறிச்சோடி காணப்பட்டது.;

Update: 2022-01-09 11:12 GMT

முழு ஊரடங்கால் ஊட்டி நகரம் வெறிச்கோடி காணப்பட்டது.

கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை பிறப்பித்துள்ளது. அதன்படி இன்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மலை மாவட்டமான நீலகிரியில் உதகை, குன்னூர் , கோத்தகிரி, கூடலூர், பந்தலூர், குந்தா உள்ளிட்ட வட்டங்களில் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள எல்லைகளில் தீவிர சோதனை நடந்து வருகிறது.

இதில் உதகை நகரில் கடைகள் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. குறிப்பாக மத்திய பேருந்து நிலையம், சேரிங் கிராஸ், தாவரவியல் பூங்கா சாலை, கமர்சியல் சாலை, எட்டின்ஸ் சாலை, ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

நகரில் பல பகுதிகளில் சுற்றித் திரிந்தவர்களை போலீசார் எந்தெந்த தேவைகளுக்கு வெளியில் வருகிறார்கள் என கேட்டறிந்து எச்சரித்து அனுப்பினர். அதேபோல் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் வந்தவர்களை தேவைகளை கேட்டறிந்து அதன்பின் செல்ல அனுமதித்தனர்.

நகரில் அதிகாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்களிடமும் காவல்துறையினர் வெளியே வரவேண்டாம் என கூறினர். மாவட்டம் முழுவதும் சுமார் 500 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் உதகை நகரில் மட்டும் சுமார் 50 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நகரில் பாலகங்கள், மற்றும் மருந்து கடைகள், பெட்ரோல் பங்க்குகள், அம்மா உணவகங்கள், திறக்கப்பட்டுள்ளன மேலும் நாள்தோறும் மக்கள் கூட்டமாக காணப்படும் மத்திய பேருந்து நிலையம், படகு இல்லம் சாலை, ரயில் நிலையம், மார்க்கெட் பகுதி உழவர்சந்தை உள்ளிட்ட இடங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா நகரமான நீலகிரியில் அதிகமான மக்கள் கூட்டம் காணப்படும் நிலையில் அரசு விதித்துள்ள முழு ஊரடங்கால் சாலைகள் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்படுகின்றன.

Tags:    

Similar News