நீலகிரி மாவட்டத்தில் 5 நாட்களுக்கு பின் திறக்கப்பட்ட வழிபாட்டு தலங்கள்
நீலகிரி மாவட்டத்தில், கோவில்கள், ஆலயங்கள், பள்ளிவாசல்கள் என அனைத்து வழிபாட்டு தலங்களும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் செயல்பட்டு வருகிறது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த, தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அவ்வகையில், பொங்கல் பண்டிகை ஒட்டி பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில், கடந்த 14-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை, அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என அரசு அறிவித்தது.
இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் கோவில்கள், ஆலயங்கள், பள்ளிவாசல்கள் மூடப்பட்டு, பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தைப்பூச திருவிழா அன்று, எல்க்ஹில் முருகன் கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட வில்லை. அங்கு நடைபெறவிருந்த தேரோட்டமும் ரத்து செய்யப்பட்டது. பக்தர்கள், கோவில் முன்பு நின்றவாறே சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில், 5 நாட்களுக்கு பின்னர், மாவட்டத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களும் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. கோவில்கள், ஆலயங்கள், பள்ளிவாசல்கள் என அனைத்து வழிபாட்டு தலங்களும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் செயல்பட்டு வருகிறது. கோவில்களுக்கு பக்தர்கள், கொரோனா கட்டுப்பாடுகளுடன் வருகை தந்தனர்.