பெண் இறப்பில் சந்தேகம்: குடும்பத்தார் எஸ்பி-யிடம் மனு
புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத கூடலூர் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும என அம்மனுவில் கூறப்பட்டு உள்ளது.;
தூத்துக்குடி மாவட்டம் சுகந்தலை கிராமத்தை சேர்ந்த ராமநாதன் மற்றும் அவரது குடும்பத்தினர் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத்திடம் புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது: எனது 3-வது அக்கா வனிதா கூடலூர் புழம்பட்டி பகுதியில் கடை வியாபாரியான கண்ணன் என்பவருடன் திருமணம் முறைப்படி நடந்தது. அவர்களுக்கு கோபிநாத் (வயது 6), கோகுல்ராஜ் (4), விக்னேஸ்வரன் (3) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். கண்ணன் என் அக்காவை சந்தேகப்பட்டு துன்புறுத்தி வந்து உள்ளார். இதற்கிடையே கடந்த 16-ந் தேதி வனிதா இறந்து விட்டதாக தகவல் கிடைத்தது.
உடனடியாக கூடலூருக்கு சென்று பிணத்தைப் பார்த்த போது, உடலில் ரத்த காயங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தோம். இறப்பதற்கு முன்பு வனிதா மற்றொரு அக்காவுக்கு தொடர்பு கொண்டு கண்ணன் மற்றும் மாமியார் அடித்து தன்னை துன்புறுத்துவதாகவும், விஷம் வைத்து கொன்று விடுவதாகவும் செல்போனில் தெரிவித்தார்.
வனிதா இறந்ததற்கான தடயங்கள் மறைக்கப்பட்டு உள்ளது. சாவில் மர்மம் உள்ளது. எனவே, அவரது கணவர் கண்ணன் மற்றும் மாமியார் அம்மாள் தங்கம் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வனிதா பிணத்தை மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும். இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத கூடலூர் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும அம்மனுவில் கூறப்பட்டு உள்ளது.