உதகையில் மாணவிக்கு கொரோனா பாதிப்பு: பள்ளி மூடல்
மஞ்சூர் அரசு பெண்கள் உயர்நிலை பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து பள்ளி மூடப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், மஞ்சூர் அரசு பெண்கள் உயர்நிலை பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு, திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து அவர், மஞ்சூர் அரசு மருத்துவமனையில் மாதிரியை கொடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதன் முடிவு நேற்று வந்ததில் கொரோனா பாதிப்பு உறுதியானது.
உடனே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மாணவி சிகிச்சைக்காக ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கொரோனா பாதித்த மாணவி மாதிரி கொடுத்த பின்னர், பள்ளிக்கு வந்து சென்றதால், சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதையடுத்து, மாணவிகள், ஆசிரியர்கள் என 90 பேரிடம் இருந்து சுகாதாரக்குழுவினர், மாதிரி சேகரித்து கொரோனா பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மஞ்சூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி 2 நாட்கள் மூடப்பட்டு உள்ளது.