உதகையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்
கலெக்டர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் கடைகளில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
உதகையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதைதொடர்ந்து கலெக்டர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் கடைகளில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
உதகை தாசில்தார் ராஜசேகர் தலைமையில் அதிகாரிகள் உதகை மெயின் பஜாரில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு நடத்தினர்.
அப்போது ஒரு கடையில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. அந்த கடையில் இருந்து 71 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களை விற்ற கடைக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். இந்த நடவடிக்கை தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.