உதகையில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல், வியாபாரிகள் வாக்குவாதம்
உதகை நகராட்சி மார்க்கெட்டில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைத்து நகராட்சி ஆணையர் அதிரடி நடவடிக்கை எடுத்தார்.;
உதகை நகராட்சி தினசரி சந்தையில் நகராட்சிக்கு சொந்தமான சுமார் 1200 கடைகள் செயல்பட்டு வருகிறது. சமீப காலமாக தினசரி சந்தையில் உள்ள கடைக்காரர்கள் நகராட்சிக்கு வாடகை செலுத்தாத நிலையில் நகராட்சி நிர்வாகம் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது.
சுமார் முப்பத்தி எட்டு கோடி ரூபாய் வரை வாடகை நிலுவைத் தொகை உள்ளதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது இதனால் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் மற்றும் நகராட்சி நிர்வாகத்தில் மின்கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து நகராட்சி நிர்வாகம் கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது இதில் இன்று வரை வாடகை செலுத்தாத கடைகளுக்கு இன்று நகராட்சி ஆணையர் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் சீல் வைக்க சென்றபோது வியாபாரிகள் சீல் வைக்க கூடாது என கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் சீல் வைக்க சென்ற கடைகளுக்கு முன்னால் வியாபாரிகள் குவிந்து அதிகாரிகளிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் பெரும் பரபரப்பு நிலவியது.
நகராட்சியில் இன்று மட்டும் 250 க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைப்பதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்த நிலையில் நகராட்சி சந்தையில் உள்ள அனைத்து கடைகளையும் அடைத்து வியாபாரிகள் ஒரே இடத்தில் குவிந்து அதிகாரிகளிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து வாக்குவாதம் செய்து போராட்டம் செய்த வியாபாரிகள் 1000 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து நகராட்சி ஆணையா் சரஸ்வதி கூறுகையில் கால அவகாசம் கொடுத்தும் இதுவரை வாடகை நிலுவைத் தொகையை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது வாடகை செலுத்தாத பட்சத்தில் அக்கடைகள் ஏலம் விடப்படுமென அதிரடியாக தெரிவித்தார்.