உதகையில் தினசரி மார்க்கெட்டிற்கு சீல்: பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்
மார்க்கெட் சீல் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவின் தேசிய இளைஞரணி சார்பில் உதகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உதகை நகராட்சி தினசரி மார்க்கெட் சீல் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து மார்க்கெட்டை திறக்க வேண்டுமென நீலகிரி மாவட்டம் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் உதகை நகராட்சி தினசரி மார்க்கெட்டில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு நகராட்சி நிர்வாகம் சீல் வைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டது. இதையடுத்து மார்க்கெட் முழுவதும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளுக்கு நகராட்சி நிர்வாகம் சீல் வைத்தது இது வியாபாரிகள் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. வியாபாரிகள் சார்பில் பல கட்டப் போராட்டங்கள் இன்று வரை நடந்து வரும் நிலையில் நீலகிரி மாவட்டம் பாஜக சார்பில் இன்று தமிழக அரசு மற்றும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து உதகை ஏடிசி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தேசிய இளைஞரணி துணைத் தலைவர் முருகானந்தம் கலந்து கொண்டார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, நகராட்சி மார்க்கெட்டில் உள்ள கடைகள் சீல் வைத்திருப்பதால் நாள்தோறும் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர் குறிப்பாக விவசாயிகள் இதில் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.
திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் மார்க்கெட் வாடகை குறித்து அறிக்கையை வெளியிட்டிருக்கிறது அதன்படி உடனடியாக நகராட்சி மார்க்கெட் பிரச்சினையைத் தீர்க்க வழிவகை செய்ய வேண்டும் என கூறினார். கொரோனா காலத்திலும் வியாபாரிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ள இந்த நேரத்தில் கடை வாடகையை உயர்த்தி மேலும் அவர்களுக்கு நெருக்கடியை தருவதை தவிர்த்து உடனடியாக மார்க்கெட்டை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டம் வாயிலாக கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நீலகிரி மாவட்ட பாஜக தலைவர் மோகன்ராஜ், பாஜக சார்பில் உதகை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட போஜராஜன், மாவட்ட பொதுச்செயலாளர் ஈஸ்வரன், பொருளாளர் தருமன், மாவட்ட துணை தலைவர் மைனலை பரமேஸ்வரன், நகரச் செயலாளர் சுரேஸ்குமார், உட்பட கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் ஏராளமானோர் கலந்துகொண்டு தமிழக அரசையும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.