அறிவியல் நகரம் ஊரக கண்டுபிடிப்பாளர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
அறிவியல் நகரம் ஊரக கண்டுபிடிப்பாளர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, நீலகிரி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.;
தமிழக அரசின் அறிவியல் நகரம் ஊரக கண்டுபிடிப்பாளர் விருது, 2018-2019 முதல் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது கிராமப்புற மக்களின் அறிவுத்திறனை ஊக்குவித்து, புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை வெளிக்கொண்டு வரும் விதத்தில், 2 சிறந்த ஊரக அறிவியல் கண்டுபிடிப்பாளர்களுக்கு தலா ரூபாய் 1,00,000-க்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
ஊரகப் பகுதியை சேர்ந்தவராக இருப்பதோடு, மரபு வழியான தொழில்நுட்ப அறிவாற்றலோடும், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் திறன் கொண்டவராகவும் இருக்க வேண்டும். ஊரகம் என்பது ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளை குறிக்கும். கண்டுபிடிப்பு மனித குலத்துக்கு நன்மை அளிக்கும் வகையில் புதுமையானதாகவும், புதிய தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டதாகவும், சமுதாயத்துக்கு பயன் அளிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.
தற்போது அறிவியல் நகரம் ஊரக கண்டுபிடிப்பாளர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த விண்ணப்பங்களை www.sciencecitychennai.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, நாளைக்குள் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0423-2442053 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்து உள்ளார்.