உதகை ரோஜா பூங்காவில் தொடர் மழையால் அழுகும் மலர்கள்:சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
தொடர் மழை காரணமாக உதகை பூங்காவில் மலர்கள் அழுகி இருப்பதால் ரசிக்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் 2-வது சீசன் நடைபெறுகிறது. நடப்பாண்டில் கொரோனா பாதிப்பு காரணமாக முழு ஊரடங்குக்கு பின்னர் 2-வது சீசனில் சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்தனர்.
இதனால் சுற்றுலா தலங்கள் களை கட்டியது. சுற்றுலா பயணிகளை கவருவதற்காக மலர் மாடத்தில் 12 ஆயிரம் பூந்தொட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக மலர்களில் தண்ணீர் தேங்கி நின்று அழுகி வருகின்றன.
அழுகிய மலர் செடிகள் அப்புறப்படுத்தப்பட்டு நர்சரியில் இருந்து பிற பூந்தொட்டிகள் காட்சிக்கு வைக்கப்படுகிறது. ஊட்டி ரோஜா பூங்காவில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரோஜா செடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த மாதம் பல்வேறு வண்ணங்களில் மலர்கள் பூத்துக் குலுங்கின. இதனை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.
தற்போது தொடர் மழையால் ரோஜா மலர்கள் கீழே உதிர்ந்து விழுந்து வருகின்றன. மேலும் செடிகளில் மலர்கள் அழுகி இருப்பதை காணமுடிகிறது. இதனால் பல செடிகளில் மலர்கள் இன்றி வெறுமையாக காட்சி அளிக்கிறது.
2-வது சீசனுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் ரோஜா பூங்காவில் மலர்கள் அழுகி இருப்பதால் கண்டு ரசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். அவர்கள் புகைப்படம் எடுக்க முடியாமல் தவிக்கின்றனர்.