உதகையில் பூத்துக்குலுங்கும் ரோஜாக்கள்
உதகை அரசு ரோஜா பூங்காவில் பூத்துள்ள பூக்கள் பார்வையாளர்கள் இன்றி பூங்கா வெறிச்சோடி காணப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மே மாத கோடை சீசனில் உதகை ரோஜா பூங்காவில் பூத்துக்குலுங்கும் ரோஜா பூக்களை காண லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரியும் நிலையில் இந்த ஆண்டு பூங்கா வெறிச்சோடி காணப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் கோடை சீசனை முன்னிட்டு உதகையில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் தோட்டக்கலைத் துறை மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் கோடை விழா நடைபெறும். கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் கொரோனா பாதிப்பால் சீசனுக்காக தயார் செய்யப்பட்ட அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளதால் தற்போது வெறிச்சோடி காணப்படுகின்றது.
இதில் குறிப்பாக மூன்றாயிரம் ரக ரோஜாக்களை கொண்ட உதகை அரசு ரோஜா பூங்காவில் சில மாதங்களுக்கு முன்பு கோடை சீசனுக்காக கவாத்து செய்யப்பட்டு பூங்கா பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது பூங்காவில் வண்ண வண்ணமாக ரோஜா பூக்கள் அதிக அளவில் பூத்து குலுங்குகின்றன. ஆனால் கொரோனா தொற்று காரணமாக பார்வையாளர்களின்றி பூங்கா கலையிழந்து காணப்படுகிறது.