உதகை படகு இல்லத்தில் 62 கடைகள் அகற்றம்

சென்னை ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து வியாபாரிகள் தங்கள் கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த பொருட்களை எடுத்து சென்றனர்.;

Update: 2021-10-25 12:00 GMT

பொருட்களை எடுத்துச் செல்லும் விவசாயிகள்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் உதகை படகு இல்லம் செயல்பட்டு வருகிறது. படகு இல்ல வளாகத்தில் 62 நகர்வு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி கையில் பொருட்களை வைத்து சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அனுமதியின்றி தற்காலிகமாக செட் அமைத்து வியாபாரிகள் கடை நடத்தி வந்தனர்.

இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் உதகை படகு இல்ல வளாகத்தில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் ஆக்கிரமித்து வைக்கப்பட்ட கடைகளை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த நிலையில் இன்று சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் வெங்கடேஷ், உதகை படகு இல்ல மேலாளர் சாம்சன் மற்றும் அதிகாரிகள் படகு இல்லத்தில் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் அனுமதி இன்றி ஆக்கிரமித்து வைத்த 62 கடைகளை அகற்ற வேண்டும் என்று தெரிவித்தனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. சென்னை ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து வியாபாரிகள் தங்கள் கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த பொருட்களை சாக்குப் பைகளில் நிரப்பி காலி செய்தனர். பின்னர் வாகனங்கள் மூலம் எடுத்து சென்றனர். தொடர்ந்து கடைகளுக்கு மேல் அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக கூரைகளை அப்புறப்படுத்தினர். இதனால் காலையில் சுற்றுலா பயணிகள் படகு இல்லத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட வில்லை. கடைகள் அகற்றப்பட்ட பின்னர் அனுமதிக்கப்பட்டனர்.

Tags:    

Similar News