உதகையில் பெய்த கனமழையால் ரேஷன்கடை சேதம்: பொதுமக்கள் சிரமம்
உதகை நகராட்சி, 21வது வார்டில் மழையால் ரேஷன் கடை சேதமடைந்த நிலையில், பொருட்கள் பெறாமல் மக்கள் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.;
உதகையில், மழையால் சேதமடைந்த ரேஷன் கடை.
உதகை நகராட்சிக்குட்பட்ட 21 வது வார்டில் சுமார் 700 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கு தேவையாக ரேஷன் கடை, அந்தப் பகுதியில் உள்ளது. உதகையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ரேசன் கடை கட்டிடம் இடிந்து விழுந்தது. இதனால் ரேஷன் கடை, சில நாட்களாக அடைக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் பெறாமல் அவதியுற்று வருகின்றனர். எனவே உடனடியாக துறை சார்ந்த அதிகாரிகள், மழையால் சேதமடைந்த ரேஷன் கடையை இதே பகுதியில் மாற்றி அமைத்து தர வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே, உதகையில் இன்றும் மழை பெய்தது. இந்த கன மழையால் மீண்டும் ரேஷன் கடை இருக்கும் கட்டிடம் சேதம் அடைந்தது. இதனால் அச்சமடைந்துள்ள அருகில் குடியிருப்போர், சேதமடைந்த கட்டிடம் இடிந்து விழும் முன்பு பாதுகாப்பான முறையில் அதை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.