உதகையில் அடுக்குமாடி குடியிருப்புகளை பயன்பாட்டிற்கு தர கோரிக்கை
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கட்டி கொடுக்கப்பட்ட வீடுகளை, பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும் என்று, ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.;
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டது. இந்த சம்பவத்தில் கேத்தி, எல்லநள்ளி, நுந்தளா, அச்சணக்கல் உள்ளிட்ட பல பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டது. சுமார் 40-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வீடுகளை இழந்து தவித்து வந்தனர்.
இவர்களுக்காக 2010-ம் ஆண்டு கேத்தி பகுதியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தற்காலிகமாக வீடுகள் கட்டப்பட்டன. ஆனால் ஒரே ஒரு அறை மட்டுமே அதில் இருப்பதால் மாற்று இடம் கோரி அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
பின்னர், அரசு குடிசை மாற்று வாரியம் சார்பில், கேத்தி அருகே உள்ள பிராசபுரம் பகுதியில் இடம் தேர்வு செய்து 180 வீடுகள் கட்டி கடந்த ஆண்டு திறக்கப்பட்டன. அப்பகுதி மக்களுக்கு இந்த வீடுகள் வழங்கப்பட்டது முதல் மின்சாரம், தண்ணீர் வரி ஆகியவை செலுத்தியும், தற்போது வரை வீட்டு சாவிகள் அந்தந்த உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை.
இந்த நிலையில், தற்போது பெய்து வரும் மழையில் தற்காலிக வீடுகள் பழுதடைந்துள்ளதால் புதிய வீடுகளை திறந்து பயன்பாட்டுக்கு விட வேண்டும் என்று, அப்பகுதி மக்கள், நீலகிரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு வழங்கினர்.