ஊட்டி உருளைக்கிழங்கு விலை உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி
Nilgiri News, Nilgiri News Today- ஊட்டியில், உருளைக்கிழங்கு விலை உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Nilgiri News, Nilgiri News Today- நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலை காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்படுகிறது. குறிப்பாக ஊட்டி உருளைக் கிழங்குக்கு தனித்துவமான ருசி உள்ளது. ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளான எம்பாலாடா, இத்தலார், கடநாடு, நஞ்சநாடு, ஆடாசோலை, தேனாடு கம்பை, கொல்லி மலை, ஓரநள்ளி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் உருளைக்கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது.
இந்த உருளைக் கிழங்குக்கு தனித்துவமான ருசி இருப்பதால், தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஊட்டியில் அறுவடை செய்யப்படும் உருளைக் கிழங்கு மேட்டுப்பாளையம் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும். அங்கிருந்து பல்வேறு பகுதி களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் சந்தைக்கு சீசன் காலங்களில் நாள்தோறும், 40 டன் அளவுக்கு உருளைக்கிழங்கு விற்பனைக்கு வருகிறது.
கடந்த ஒரு வார காலமாக 45 கிலோ எடை கொண்ட உருளைக் கிழங்கு மூட்டை சராசரியாக ரூ.2 ஆயிரம் முதல் ரூ.2,500 வரை விற்பனையாகி வருகிறது. உருளைக் கிழங்கு விலை உயர்ந்துள்ளதால், சிறு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்ததால், உருளைக் கிழங்கு அறுவடையில் சற்று தொய்வு காணப்பட்டது. தற்போது மழை குறைந்து விட்டதால், அறுவடைக்கு தயாரான உருளைக் கிழங்கை மூட்டைகளில் நிரப்பி மேட்டுப்பாளையம் சந்தைக்கு விவசாயிகள் எடுத்து சென்று வருகின்றனர். அங்கு உருளைக்கிழங்குக்கு நல்ல விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதேபோல் கடந்த ஒரு வாரமாக மேட்டுப்பாளையத்தில் ஊட்டி பூண்டும் அதிகபட்சமாக கிலோ 4500 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. இதனால் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வரும் பூண்டு, உருளைக் கிழங்கு அளவு குறைந்துள்ளது.