ஊட்டியில் புலியை விஷம் வைத்துக்கொன்ற பெட்டிக் கடைக்காரர் கைது
Nilgiri News, Nilgiri News Today - ஊட்டி, எமரால்டு நேரு நகர் பாலம் அருகே புலிகளை விஷம் வைத்த கொன்றதாக சேகர் என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர்.;
Nilgiri News, Nilgiri News Today- நீலகிரி மாவட்டம் எமரால்டு நேரு நகர் பாலம் அருகே புலிகளை விஷம் வைத்த கொன்றதாக சேகர் என்பவரை வனத்துறையினர் கைது செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது,
கோத்தகிரி அடுத்த எமரால்டு வனப்பகுதியில் 2 புலிகள் மர்மமான முறையில் செத்து கிடந்தன. எனவே அவற்றை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்து பார்த்தனர். இதில் அவை விஷம் வைத்து கொல்லப்பட்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது புலிகள் இறந்து கிடந்த அதே பகுதியில் ஒரு மாட்டின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. அதன் உடலிலும் பூச்சிக் கொல்லி மருந்தின் வாசனை தென்பட்டது.
எனவே செத்துப் போன மாட்டின் உடம்பில் விஷம் தடவி யாரோ சிலர் புலிகளை கொன்று இருக்கலாம் என்று வனத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே, அந்த பகுதியில் வசிக்கும் விவசாயிகள் சிலரிடம், வளர்ப்பு மாடு காணாமல் போனதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
இதில் எமரால்டு பகுதியில் வசிக்கும் சேகர் என்பவர் வீட்டில் ஒரு பசுமாடு கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனது தெரிய வந்தது. எமரால்டு பகுதியில் சேகர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். மேலும் விவசாயம் மற்றும் கால்நடைகளையும் வளர்த்து வருகிறார். இந்நிலையில், அவரது கால்நடைகள் கடந்த 2019-ம் ஆண்டு புலி தாக்கி இறந்து உள்ளன.
மேலும் அந்த பகுதியில் பலரின் கால்நடைகளும் புலிகளின் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளன.
இந்நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சேகரின் பசுமாட்டை புலிகள் தாக்கி அடித்து கொன்றன. இதனால் ஆத்திரம் அடைந்த சேகர், இறந்த பசு மாட்டின் உடலில் விஷம் கலந்து அந்த பகுதியில் போட்டு உள்ளார். அதனை 8 வயது புலி தின்றதால் உயிரிழந்தது தெரிய வந்து உள்ளது, என்றனர்.
இதையடுத்து சேகரை வனத்துறையினர் நேற்று இரவு அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவலாஞ்சி வனப்பகுதியில் தண்ணீரில் இறந்து கிடந்த புலியின் உடலில் மட்டும் பூச்சிக்கொல்லி மருந்து வாசனை அதிகளவில் இருந்தது. எனவே அது விஷம் கலந்த இறைச் சியை தின்று உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டது. ஆனால், புல் தரையில் இறந்து கிடந்த புலி விஷம் தின்றதால்தான் இறந்ததா? என்பது பற்றி இதுவரை உறுதியாக தெரியவில்லை. அந்த புலியின் உடலில் காயங்கள் இருப்பதால் அவை சக விலங்குகள் தாக்கி இறந்து இருக்கலாம் என்று தெரிகிறது. இருந்த போதிலும் வனத்துறை அதிகாரிகள் இதுகுறித்த மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.