உதகை நகராட்சிக்கு வாடகை செலுத்திய கடைகள் திறக்க அனுமதி
உதகையில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு நகராட்சி நிர்வாகம் சீல் வைத்ததையடுத்து வியாபாரிகள் சிலர் வாடகையை செலுத்தினர்.
உதகை நகராட்சி மார்க்கெட் பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளன. இந்நிலையில் நகராட்சிக்கு வாடகை செலுத்தாத கடைகள் சீல் வைக்கப்பட்டன. அதேசமயம் வாடகை தொகை செலுத்தும் கடைகள் திறக்கலாம் என நகராட்சி கூறியிருந்த நிலையில், நகராட்சிக்கு 5 வியாபாரிகள் முழு தொகையையும், 2 வியாபாரிகள் 50 சதவீத வாடகையும் செலுத்தினர். இதனால் ஒரே நாளில் சுமார் 38 லட்சம் வசூலானது. மேலும் நகராட்சி ஆணையாளர் சரஸ்வதியிடம் தொகையை செலுத்தி கடையை திறக்க வியாபாரிகள் அனுமதி பெற்றனர்.
இதில் 50 சதவிகிதம் வாடகை செலுத்திய வியாபாரிகள் ஒப்பந்த பத்திரம் மூலம் 15 நாட்களுக்குள் நிலுவையிலுள்ள வாடகையை செலுத்த உறுதியளித்த பின் கடை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. 7 கடைகளை திறப்பதற்கான உத்தரவை நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி வியாபாரிகளிடத்தில் வழங்கினார். இதில் வருவாய் அலுவலர் பால்ராஜ் உடனிருந்தார்.