உதகையில் ஆக்ஸிஜன் டேங்க் அமைச்சர் ஆய்வு
அரசு தலைமை மருத்துவமனையில் 6 KL அளவு கொண்ட ஆக்ஸிஜன் டேங்கை வனத்துறை அமைச்சர் ஆய்வு செய்தார்.;
நீலகிரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அனைத்து துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல் பட வேண்டுமென தமிழக வனத்துறை அமைச்சர் திரு K. ராமச்சந்திரன் கூறினார். இன்று உதகமண்டல அரசு தமிழக மாளிகையில் மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி இன்ன சென்ட் திவ்யா மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற கொரோனா தடுப்பு குறித்த ஆய்வு கூட்டத்தில் பேசிய அவர், மாவட்டத்தில் இதுவரை 4, 54,830 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அதில் தொற்று பாதித்த 15,651 பேர்களில் 12,677 பேர் சிகிச்சை முடித்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக கூறினார்.
மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் கொரோனா நலவாழ்வு மையங்களில் 1533 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டதில் 1092 படுக்கைகள் மட்டும் பயன்பாட்டில் உள்ளதாகவும், இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க படுக்கை வசதியோ, மற்றும் ஆக்ஸிஜன் பற்றக்குறையோ ஏற்படவில்லை என தெளிவு படுத்தினார். மாவட்டத்தில் அதிகளவு பழங்குடி மக்கள் இருப்பதால் அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பு ஊசி போடப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். ஆய்வு கூட்டத்தை தொடர்ந்து உதகமண்டல அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டு வரும் 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்ஸிஜன் மையத்தையும் அமைச்சர் நேரில் பார்வையிட்டார்.