உதகையில் பழங்குடியினர் அருங்காட்சியகம் திறப்பு
முத்தோரை பாலாடா பகுதியில் பழங்குடியினர் ஆராய்ச்சி நிலையத்தில் அமைச்சர் கயல்விழி அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார்.
உதகை அருகே உள்ள முத்தோரை பாலாடா பகுதியில் பழங்குடியினர் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள பழங்குடியினர் அருங்காட்சியகத்தை இன்று கயல்விழி செல்வராஜ் துவக்கி வைத்தார். இதில் பழங்குடியினர் உற்பத்தி செய்யும் பொருட்களை பார்வையிட்டு அருங்காட்சியகத்தில் உள்ள பழங்குடியினர் வாழ்வியலையும், கலாச்சாரத்தையும் காட்சிப்படுத்தி இருந்ததை பார்வையிட்டு பழங்குடியினரிடையே வாழ்வியல் முறைகளை பற்றி கேட்டறிந்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர், நீலகிரியில் உள்ள பழங்குடியினரின் கலாச்சாரங்களை அறிந்து கொள்ளும் வகையில் இந்த காட்சியகம் இருக்குமெனவும் அழிந்து வரும் அவர்களின் கலாச்சாரத்தை மீட்டெடுக்கும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் என தெரிவித்தார்.
மேலும் தற்போது தமிழகம் முழுவதும் பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து வரும் நிலையில் நீலகிரியில் உள்ள 23 பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி கட்டிடங்கள் துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர். பள்ளிக் கட்டடங்கள் ஆய்வுகள் நடத்திய பின் ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்கள் ஆய்வு செய்யும் பணி தொடரும் எனவும், ஆபத்தான பள்ளி கட்டிடங்கள் ஆய்வுக்கு பின் கண்டறிந்தால் இடிக்கும் பணி நடைபெறுமென அவர் தெரிவித்தார்.