உதகையில் கோடை சீசன் துவக்கம்: வியாபாரிகளுடன் போலீசார் ஆலோசனை
சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வர்த்தகர்கள் கோரிக்கை;
சுற்றுலா நகரமான உதகையில், சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனில் ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருகை புரிகின்றனர். பள்ளிகள் தொடர் விடுமுறை மற்றும் சமவெளிப் பகுதிகளில் நிலவும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக, உதகைக்கு வருவது வாடிக்கை. இதனால் உதகையில் சுற்றுலா தலங்களுக்கு செல்லக்கூடிய முக்கிய சாலைகளான சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, மத்திய பேருந்து நிலையம், படகு இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன.
இதனை கட்டுப்படுத்தும் வகையில், சேரிங்கிராஸ் மற்றும் கமர்சியல் சாலை பகுதிகளில் உள்ள கடை வியாபாரிகளிடம் வாகன நெரிசலை கட்டுப்படுத்துவது குறித்து, உதகை பி1 காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்பதால் கடை உரிமையாளர்கள் தங்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள இடங்களில் முறையாக வாகனங்களை நிறுத்த அறிவுறுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கடை உரிமையாளர்கள் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்தனர்.