ஊட்டியில் மழையால் பாதிப்பு இல்லை: அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்
ஊட்டியில் மழையால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று அமைச்சர் ராமச்சந்திரன் கூறி உள்ளார்.
ஊட்டிக்கு மழையால் பாதிப்பு இல்லை என்று அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.
நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.58 லட்சம் செலவில் குன்னூர் தாலுகா பந்துமை முதல் ரேலியா டேம் வரை தார்ச்சாலை, பந்துமையில் ரூ.4 லட்சம் மதிப்பில் வெள்ளத்தடுப்பு சுவர், அருவங்காடு ஒசட்டியில் ரூ.12 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம், காரக்கொரையில் ரூ.10 லட்சம் மதிப்பிலான தரைமட்ட நீர்தேக்கதொட்டியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
பின்னர் அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை கூடலூர், ஊட்டி, குந்தாவிலும், வடகிழக்கு பருவமழை கோத்தகிரி, குன்னூரிலும் அதிகமாக பெய்யும். கடந்த வருடம் 239 மி.மீட்டர் மழையும், நடப்பாண்டில் 264.2 மி.மீட்டர் மழை இன்று வரை பெய்துள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு மழை மிக அவசியம். கூடலூரில் பெய்து வரும் இந்த மழையால் அந்த பகுதி மக்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கிறது.
தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டதால் மாவட்டத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. இதன் ஒருபகுதியாக பேரிடர் மீட்பு குழுவினர் உஷார்படுத்தப்பட்டனர். அனைத்து துறை ஊழியர்களும் தயார்நிலையில் இருந்தனர். இதனால் நீலகிரியில் தென்மேற்கு பருவமழையால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் இல்லை. மழை தொடங்குவதற்கு முன்பாகவே கூடலூர், ஊட்டியில் மழைநீர் கால்வாய்கள் அனைத்தும் தூர்வாரப்பட்டதால் இந்த பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்பு எதுவுமில்லை.
இருந்தபோதிலும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் 12 ஆயிரம் மணல் மூட்டைகளும், தீயணைப்புத்துறை மூலம் கருவிகளும் தயார்நிலையில் உள்ளன. நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது குன்னூர் கோட்டாட்சியர் பூஷணகுமார், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) இப்ராகிம்ஷா, உதவி செயற்பொறியாளர் சுப்ரமணியன், கோத்தகிரி தாசில்தார் கோமதி, ஜெகதளா பேரூராட்சி செயல் அலுவலர் சதாசிவம் உள்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.