இறைச்சிக்கடைகளுக்கு 'சீல்' - உதகை நகராட்சி சுறுசுறுப்பு
உதகையில், ஊரடங்கை மீறி செயல்பட்ட 2 இறைச்சி கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
உதகையில், கொரோன பரவலை தடுக்க, ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அதேநேரம், பொது மக்களுக்கான அத்தியாவசிய தேவைகள் அந்தந்த பகுதியிலேயே சென்றடையும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனினும், ஒருசில இடங்களில், விதிகளை மீறி கடைகள் செயல்படுவதாக, புகார்கள் எழுந்துள்ளன.
இதையடுத்து, உதகை நகரில் கடைகள் திறக்கப்பட்டு உள்ளதா என நகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட இரண்டு இறைச்சி கடைகளை கண்டறியப்பட்டு, அவற்றுக்கு, சீல் வைக்கப்பட்டது.
மேலும், இனிமேல் விதிகளை மீறி கடைகள் திறக்கப் போவதில்லை என எழுத்துப்பூர்வமாக கடையின் உரிமையாளர்கள் எழுதி வாங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள உதகை நகராட்சி ஆணையாளர், விதிமீறி செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். பொது மக்களுக்கு அத்தியாவசியத் பொருட்களை வினியோகம் செய்யும் நபர்கள், கட்டாயம் தடுப்பூசி போட்டவராக இருக்க வேண்டுமென்று தெரிவித்தார்.