உதகை காய்கறி சந்தையில் கழிப்பிடம் இல்லை: 'நெளியும்' வியாபாரிகள்
உதகை மத்திய பேருந்து நிலையத்தில் கட்டண கழிப்பிடம் பூட்டப்பட்டுள்ளதால், வியாபாரிகள் அவசரத்திற்கு 'ஒதுங்க' முடிவதில்லை. கழிப்பிடத்தை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அத்துடன், கொரோனா காரணமாக உதகையில் மக்கள் அதிகமாக கூடும் மார்க்கெட் மற்றும் உழவர் சந்தைகள் இடமாற்றம் செய்யப்பட்டன. இதில் மார்க்கெட் பகுதியில் இயங்கிவந்த 160 காய்கறி கடைகள், மத்திய பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டது.
இட மாற்றம் செய்யப்பட்டு, ஒரு மாத காலம் ஆகும் நிலையில், தற்காலிக சந்தையாக உள்ள மத்திய பேருந்து நிலையத்தில் கழிப்பிட வசதி இல்லை. இதனால், ஆத்திர அவசரத்திற்கு எங்கு ஒதுங்குவது என்று புரியாமல், வியாபாரிகள், பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர்.
எனவே பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பயன்படுத்தும் விதமாக,பேருந்து நிலையத்தில் பூட்டியே கிடக்கும் கழிப்பிடத்தை பயன்பாட்டிற்கு திறந்து விடவேண்டும் என்று, சுமைதூக்கும் தொழிலாளர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.