நீலகிரி மாவட்டத்தில் ரூ.3,850 கோடி கடன் இலக்கு: கலெக்டர் தகவல்!
நீலகிரி மாவட்டத்தில் ரூ.3,850 கோடி கடன் வழங்க இலக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறினார்.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில், மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பில் 2021-2022 ஆம் ஆண்டிற்கு ரூ.3,850.45 கோடிக்கான கடன் திட்ட அறிக்கையினை மாவட்ட ஆட்சித்தலைவர்.ஜெ.இன்னசென்ட் திவ்யா இன்று வெளியிட்டார்.
பின்னர் இதுபற்றி அவர் கூறுகையில், நீலகிரி மாவட்டத்திற்கு நடப்பு ஆண்டிற்கு ரூ.3,850.45 கோடி கடன் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கப்படுகிறது.
அதேபோல் மகளிர் குழுக்களுக்கு பல்வேறு கடன்களும், வணிக ரீதியான கடன்களும் வங்கிகள் மூலம் வழங்கப்படுகிறது. இதற்காக ஆண்டுதோறும் வங்கிகள் கடன் இலக்கு நிர்ணயம் செய்வது வழக்கம். இதற்காக நடப்பு ஆண்டிற்கான கடன் திட்டம் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.
இந்த கடன் திட்ட அறிக்கையில், துறை சார்ந்த விவரங்கள் அடங்கி உள்ளது. மாவட்ட முன்னோடி வங்கி மூலம் இந்த ஆண்டிற்கு ரூ.3,850.45 கோடி கடன் திட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் ரூ.375.45 கோடி அதிகம். கடந்த ஆண்டை காட்டிலும் 10.80 சதவிகிதம் அதிகமாக இம்முறை கடன் தொகையை அதிகரிக்கப்பட்டுள்ளது.
விவசாயம் சார்ந்த தொழில்கள் துவங்க ரூ.2,722.50 கோடியும், குறு மற்றும் நடுத்தர தொழில் துறை மேம்பாட்டிற்கு ரூ.485.10 கோடியும் பிற முன்னுரிமை கடன்களுக்கு ரூ.642.85 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே நீலகிரி மாவட்டத்தில் தகுதியுடையவர்களுக்கு கடன் உதவிகளை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் மாவட்ட என ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.