மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு
மகளிர் திட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்படும் விற்பனை வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாம் கலெக்டர் தகவல்;
நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித்
நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது,
தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் மாநில அளவிலான கண்காட்சி நடைபெறுகிறது. நீலகிரியில் மகளிர் திட்டம், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கம் மூலம் மகளிர் சுயஉதவி குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுகிறது.
நீலகிரியில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, பகுதி அளவிலான கூட்டமைப்பில் உறுப்பினராக பதிவு செய்து உள்ள மகளிர் சுயஉதவி குழுக்கள் தங்கள் குழுக்களின் மூலமாகவோ அல்லது குழுவில் ஏதேனும் உறுப்பினர்கள் மூலமாகவோ உற்பத்தி பொருட்களை தயார் செய்து கொண்டிருந்தால் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
மகளிர் சுயஉதவி குழுவின் தீர்மான நகல், உறுப்பினர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் மாதிரி, உற்பத்தியாளரின் ஆதார் அட்டை, உற்பத்தி பொருட்கள் குறித்த ஏதேனும் பதிவு செய்யப்பட்டு இருந்தால் அதன் சான்று, விற்பனை செலவினம், விலை நிர்ணயம் குறித்த விவரத்துடன் திட்ட இயக்குனர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், கலெக்டர் அலுவலக கூடுதல் வளாகத்தில் பதிவு செய்து மகளிர் திட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்படும் விற்பனை வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.