உதகையில் தானியங்கி குடிநீர் இயந்திரம் தொடர்பான ஆலோசனை கூட்டம்

உதகையில் தானியங்கி குடிநீர் இயந்திரம் வாயிலாக குடிநீர் வழங்குதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-03-16 00:30 GMT

கலெக்டர் அம்ரித் 

நீலகிரி மாவட்டத்தில் குடிநீர் வழங்கும் தானியங்கி எந்திரங்களை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வருவது தொடர்பாக உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அம்ரித் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் கலெக்டர் அம்ரித் தெரிவித்ததாவது:  சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்க அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தவிர்க்க பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இடையே ஆட்டோக்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து குடிநீர் வழங்கும் தானியங்கி எந்திரங்களை ஒரு வாரத்துக்குள் சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு தானியங்கி எந்திரத்துக்கு ஒரு பொறுப்பாளரை நியமிக்க வேண்டும். அவர் அந்த எந்திரத்தின் செயல்பாட்டை கண்காணிக்க வேண்டும். உள்ளாட்சித் துறை அலுவலர்கள் குடிநீர் ஏ.டி.எம். எந்திரத்துக்கு தேவையான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். சுற்றுப்பகுதியை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

எந்திரத்துக்கு தேவையான மின்சாரம் கிடைப்பதை நேரில் பார்வையிட்டு உறுதி செய்ய வேண்டும். சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் வழிபாதைகளில் உள்ள எந்திரங்கள் சரியான முறையில் செயல்படுகிறதா என்று பொறுப்பு அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். வெளிமாநில மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் சோதனை சாவடியில் சோதனையிட்டு, பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால் பறிமுதல் செய்வதோடு,

நீலகிரிக்கு வரும் வாகனங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, நகராட்சி ஆணையாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News