உதகையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த எம்பி
உதகை பிங்கர் போஸ்ட் பகுதி மற்றும் படகு இல்லம் சாலையில் ஏற்பட்ட மண்சரிவு பகுதிகளை எம்பி ராசா பார்வையிட்டார்.
நீலகிரி மாவட்டத்தில் அண்மை மழையினால் காந்தல், விசி காலனி, படகு இல்லம் , எல்லநள்ளி உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட இடங்களை நீலகிரி எம்பி ஆ.ராசா தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டனர். உதகை பிங்கர் போஸ்ட் பகுதியிலுள்ள விசி காலனியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைத்துள்ள அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு அவர்களுக்கு கம்பளி ஆடைகள், மற்றும் ரேஷன் பொருட்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடையே ஆ.இராசா கூறும் போது, மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக பெய்த மழையினால் 15 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், பல்வேறு இடங்களில் தடுப்பு சுவர் இடிந்துள்ளதாகவும், நல்வாய்ப்பாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றார்.
பயிர் சேதம் பெரிய அளவில் இல்லை என்றும், இருப்பினும் கள ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார். மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் சேதங்கள் பெருமளவு தவிர்க்கப்பட்டதாக கூறினார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் பொறுப்பு வகிக்கும் கீர்த்தி பிரியதர்ஷினி, உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.