உதகையில் நடமாடும் ரேஷன் கடை : வனத்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்
உதகையில் 32 வது நடமாடும் ரேஷன் கடை வாகனத்தை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கிவைத்தார்.
உதகையில் இன்று மாவட்டத்தின் 32 வது நடமாடும் நியாயவிலைக் கடையை மாவட்ட ஆட்சி தலைவர் இன்னசென்ட் திவ்யா முன்னிலையில், அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடையே பேசிய அவர், கூறியதாவது.
வனப்பகுதிகளில் ஏற்படும் காட்டு தீ, மற்றும் பல்வேறு வனக்குற்றங்களை தடுக்க கூடுதலான எண்ணிக்கையில் வேட்டை தடுப்பு காவலர்கள் புதிதாக பணியமர்த்தப்படவுள்ளதாக கூறினார்.
நீலகிரி மாவட்டத்தில் இயங்கும் தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத்தின் கீழ் இயங்கும் தேயிலை தொழிற்சாலைகள் இன்னும் இரண்டு ஆண்டுகளில் லாபத்தில் இயங்கும் வகையில் நவீனப் படுத்தப்படும் என்றார்.
தமிழகத்தில் விலங்குகளுக்கு ஏற்படும் ஆந்த்ராக்ஸ் போன்ற தொற்றை நோயை கட்டுப்படுத்த உயர்மட்ட மருத்துவ குழு ஏற்படுத்தப்படும் என்றும், இக்குழு மாவட்டங்களில் செயல்படும் கால்நடை மருத்துவர்களுடன் இணைந்து செயல்படுவார்கள் என்றார்.
தமிழகத்தின் வனப்பரப்பை 33 சதவிகிதமாக உயர்த்த நடவடிக்க எடுக்கப்பட்டுவருவதாகவும், இதன் ஒரு பகுதியாக ஆண்டிற்கு 5 கோடி மரங்கள் நட திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மனித விலங்கு மோதல்கள் தொன்று தொட்டு நடைபெறும் சம்பவம் என்றும், காப்பு காடுகளை சுற்றி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளதாலும், மனிதர்கள் தேவையின்றி காடுகளுக்கு அத்துமீறி செல்வதாலும் மனித விலங்கு மோதல்கள் அதிகரித்து வருவதாக கேள்வி ஒன்றிற்கு பதலளிக்கையில் அமைச்சர் கூறினார்.