நீலகிரி மாவட்டத்தில் நாளை மறுநாள் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்
நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதில் ஆயிரத்து 632 பேர் ஈடுபட்டு உள்ளனர்.;
நீலகிரி மாவட்டத்தில் 18 வயதுக்கு மேல் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த முதன்மை மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது. இதற்காக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 6 தாலுகாக்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறும்போது நீலகிரி மாவட்டத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமுக்கு 295 முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த முகாம்கள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும். ஒரு முகாமில் தடுப்பூசி செலுத்தும் கிராம சுகாதார செவிலியர் அல்லது செவிலியர், ஒரு தரவு பதிவாளர், 2 அங்கன்வாடி பணியாளர்கள் (பொதுமக்களை அழைத்துவர) என மொத்தம் 4 பணியாளர்கள் பணியில் ஈடுபடுவார்கள். மொத்தம் 295 முகாம்களுக்கு 1,180 பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். முதல் மற்றும் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்த உள்ளவர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
இந்த பணியில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி சார்ந்த அனைத்து அரசு அலுவலர்களும் தடுப்பூசி போடுவதற்கான டோக்கன்களை வினியோகித்து வருகின்றனர். இதில் ஆயிரத்து 632 பேர் ஈடுபட்டு உள்ளனர். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்.
நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 5 லட்சத்து 88 ஆயிரம் பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. கேரளாவில் நிபா வைரஸ் தொற்று இருப்பதால், கொரோனா தடுப்பூசி நிபா வைரஸ் பாதிப்புக்கு எதிராக செயல்படுவதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கிறது. எனவே, நீலகிரியில் உள்ள அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொண்டு நிபா வைரஸ் தொற்றிலிருந்து காத்துக் கொள்வதோடு, கொரோனா இல்லாத நீலகிரியை உருவாக்க ஒருங்கிணைந்து செயல்படுவோம் என அவர் கூறினார்.