ஊர் சுற்றியவர்களை உறுதிமொழி ஏற்கச் செய்த உதகை போலீஸ்!
உதகையில், ஊரடங்கில் ஊர் சுற்றியவர்களை பிடித்த போலீசார், இனி வெளியே திரியமாட்டோம் என்று, அவர்களிடம் உறுதிமொழி ஏற்கச் செய்தனர்.;
தமிழகத்தில், இரண்டாம் கட்ட தளர்வுகளற்ற ஊரடங்கு ஜூன் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் பொதுமக்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க காவல்துறையினர் தீவிர பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்திலும், மாவட்ட மற்றும் மாநில எல்லைகளிலும் காவல் துறையினர் ஈடுபட்டு வரும் நிலையில், உதகை நகரில் சாதாரண நாட்களில் நடமாடுவது போல், பொதுமக்கள் நடமாடுவதை காண முடிகிறது. இதையடுத்து, காவல்துறையினர் தேவையின்றி நடமாடுபவர்களை பிடித்து விசாரித்தனர். அவர்களை எந்த தேவைகளுக்காக வெளியே செல்கின்றனர் என கேட்டறிந்தனர்.
இதில், 20 பேருக்கும் மேலாக காவல்துறையினர் விசாரித்ததில், தேவைகள் இன்றி வெளியே சுற்றுபவர்கள் என தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் உறுதிமொழி எடுக்க வைத்தனர். கொரோனா ஊரடங்கில் தேவையின்றி வெளியே வர மாட்டோம் - மீறி வெளியே நடமாடினால், செய்தால் கொரோனா வார்டில் தங்களை அனுமதிக்கலாம் என்று, உறுதிமொழி எடுக்கச் செய்து, பின்பு காவல்துறையினர் அவர்களை அனுப்பி வைத்தனர்.