கோடநாடு வழக்கு விசாரணை: ஜாமீன் மனு தள்ளுபடி
உதகை அமர்வு நீதிமன்றத்தில் கோடநாடு வழக்கில் கைதாகியுள்ள இருவருக்கு ஜாமீன் மனு தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவு.;
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யபட்டு கூடலூர் கிளை சிறையில் உள்ள கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் உறவினர் ரமேஷ் ஆகியோரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கோடநாடு கொலை, கொள்ளை சதி திட்டம் குறித்து இவர்கள் இருவருக்கும் தெரிந்திருந்தும் போலிஸ் விசாரணையின் போது சாட்சிகளை மறைத்தல், செல்போன் அழித்தல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் என இருவரையும் கடந்த மாதம் 25-ம் தேதி தனிபடை போலிசார் கைது செய்தனர்.
கடந்த 2-ம் தேதி இருவரும் ஜாமின் கோரி உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இன்று அந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில் தனபால் மற்றும் ரமேஷ் ஆகியோருக்கு ஜாமின் வழங்கினால் மற்ற சாட்சிகளை களைக்க வாய்ப்பு உள்ளதாகவும் இது வரை கனகராஜின் வீட்டில் இருந்து 3 செல்போன்கள் மற்றும் 6 சிம்கார்டுகளை கைபற்றபட்டு இருப்பதால் மேலும் விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் ஜாமின் வழங்க கூடாது என அரசு தரப்பில் வாதிடபட்டது.
மேலும் கோடநாடு கொலை கொள்ளை காரணமாக தனபால் மற்றும் ரமேஷை போல மேலும் சிலரை விசாரிக்க வேண்டி உள்ளதாகவும் போலிசார் தெரிவித்தனர். இதனையடுத்து தனபால் மற்றும் ரமேஷின் ஜாமின் மனுவை மாவட்ட நீதிபதி சஞ்சை பாபா தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.