ஊட்டி தாவரவியல் பூங்கா மரங்களின் வரலாறு அறிய கியூஆர் கோடு அறிமுகம்

ஊட்டி தாவரவியல் பூங்கா மரங்களின் வரலாற்றை சுற்றுலா பயணிள் அறிய கியூஆர் கோடு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

Update: 2023-07-14 17:03 GMT

ஊட்டி தாவரவியல் பூங்கா மரங்களின் வரலாற்றைஅறிய கியூஆர் கோடு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா அமைக்கும் பணிகள் 1848-ம் ஆண்டு தொடங்கி 1867-ம் ஆண்டு முடிக்கப்பட்டது. தொடக்கத்தில் ஆங்கிலேயருக்கு தேவையான காய்கறிகளை சாகுபடி செய்யவே இந்த பூங்கா அமைக்கப்பட்டது. ஆனால், மெக் ஐவர் என்ற ஆங்கிலேயர் இங்கிலாந்தில் உள்ள கியூ பூங்காவை போன்று ஊட்டி பூங்காவை அமைக்க விரும்பி, ஐரோப்பிய நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட மரக்கன்று, செடிகளை நடவு செய்தார்.

பின்னர் ஜப்பான், ஆஸ்திரேலியா, கேனரி ஜலேண்ட் போன்ற நாடுகளிலிருந்து பிரபலமான மரக்கன்றுகளை கொண்டுவந்து நடவு செய்தார். தற்போது, இந்த நூற்றாண்டு பழமையான மரங்கள் மற்றும் மூலிகைச் செடிகள் அறிவியல் மாணவர்களுக்கு தகவல் களஞ்சியமாகவும், சுற்றுலா பயணிகளுக்கு காட்சி விருந்தாகவும் இருந்து வருகிறது. ஊட்டி தாவரவியல் பூங்காவை ஆண்டுதோறும் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் பார்வையிடுகின்றனர். பூங்காவின் அழகை ரசிக்கும் சுற்றுலா பயணிகள் வானுயர்ந்து நிற்கும் மரங்களைப் பார்த்து வியப்படைகின்றனர்.

ஆனால், அவற்றின் வரலாறு குறித்து அறியும் வசதி இல்லாததால் ஏமாற்றமடைந்து வந்தனர். இந்நிலையில், ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள பழமைவாய்ந்த மற்றும் அரியவகை மரங்கள், தாவரங்கள் குறித்து சுற்றுலா பயணிகள் தெரிந்து கொள்ளும் வகையில், கியூஆர் கோடு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் அதை தங்கள் செல்போன் மூலம் ஸ்கேன் செய்து விவரங்களை தெரிந்துகொள்ள முடியும்.

இதில், அந்த மரம் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது. எப்போது நடவு செய்யப்பட்டது. எந்த நாட்டைச் சேர்ந்தது. அவற்றின் மூலிகைத் தன்மை என்ன என்ற விவரங்களை தெரிந்துகொள்ளலாம். இதுகுறித்து தாவரவியல் பூங்கா உதவி இயக்குநர் பாலசங்கர் கூறியதாவது:-

ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவதால், அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் தாவரங்களின் விவரங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜப்பான் ரோஸ் என்று அழைக்கப்படும் கமாலியா, டிராகன் மரம், குரங்கு ஏறாமரம், ருத்ராட்சை மரங்களில் கியூஆர் கோடு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 100 மரங்களுக்கு கியூஆர் கோடு பெயர் பலகை வைக்கப்படும், பின்னர் அனைத்து மரங்களுக்கும் கியூஆர் கோடு உடன் பெயர் பலகை வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News