உதகையில் தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் ஆய்வு

உதகை விருந்தினர் மாளிகையில் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது.

Update: 2021-09-21 11:25 GMT

ஆய்வில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் ஆணையத்தலைவர்.

உதகை தமிழக விருந்தினர் மாளிகையில் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்து மாணிக்கம், உதகை சப்-கலெக்டர் மோனிகா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகளில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்கள் கலந்துகொண்டு தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை கூறினர். அதன் பின்னர் ஆணைய தலைவர் வெங்கடேசன் நிருபர்களிடம் பேட்டியளிக்கையில் கூறியதாவது:

ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் முறையாக வழங்கப்படுகிறதா, வருங்கால வைப்பு நிதி, மருத்துவ காப்பீடு உள்ளதா என்று கேட்டறியப்பட்டது. பலர் புகார் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து மாவட்ட அளவில் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.

தூய்மை பணியாளர்கள் கூறும் புகார்கள் உண்மையா என்று விசாரித்து, உண்மை என தெரிய வந்தால் ஒப்பந்தாரர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். பணியாளர்களுக்கு சம்பளம் முறையாக வழங்காதது, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் இருக்கும் ஒப்பந்ததாரைர கருப்பு பட்டியலில் வைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்து உள்ளேன். தமிழகத்தில் தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த முறையை ஒழிக்க வேண்டும். அப்போது தான் அவர்களது வாழ்வாதாரம் மேம்படும்.

ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களின் பாதிப்புகளை கேட்டறிய தமிழகத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைகளை கூறும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது. அவர்கள் புகார்களை கூற பயப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News