சர்வதேச அளவில் சணல் ஏற்றுமதியில் இந்தியா முதலிடம்
மண், நீர் வள பாதுகாப்பு, சாலை மேம்பாட்டிலும் சணலின் பயன்பாடு குறித்த கருத்தரங்கம் உதகையில் நடைபெற்றது.
இந்திய மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு ஆராய்ச்சி மையம், தேசிய சணல் வாரியம் சார்பில், மண் மற்றும் நீர் வள பாதுகாப்பு, சாலை மேம்பாட்டிலும் சணலின் பயன்பாடு குறித்த கருத்தரங்கம் உதகையில் நடைபெற்றது. ஆராய்ச்சி மைய முதன்மை விஞ்ஞானி மணிவண்ணன் அனைவரையும் வரவேற்றார்.
கருத்தரங்கில் தேசிய சணல் வாரிய ஆணையர் மோலாய் சந்தன் சக்கரபர்த்தி பேசியதாவது: சணல் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருளாகும். இது சாலை மேம்பாட்டு பணிகள், மண் மற்றும் நீர்வள பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படுகிறது. மலை சரிவான பகுதிகளில் நிலைப்புத் தன்மையை அதிகரிக்க சணல் பெரிதும் உதவுகிறது. மேலும் பொறியியில் பிரிவிலும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு ஹெக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்ட பயிர்கள் 15 மெட்ரிக் டன் கார்பன் டை ஆக்சைடை உட்கொள்கிறது. மேலும் 11 மெட்ரிக் டன் ஆக்சிஜனை வெளியிடுகிறது.
இந்த பயிர்கள் மண்ணில் உயிரி சத்துக்களை அதிகரிக்க செய்வதோடு, சுற்றுச்சூழல் மற்றும் வேளாண்மையின் தரத்தை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சர்வதேச அளவில் சணல் உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகித்து வருகிறது. கொரோனா பாதிப்பு இருந்தாலும் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சணல் ஏற்றுமதி அதிகரித்து உள்ளது. 2020-2021-ம் ஆண்டில் ரூ.1,500 கோடி மதிப்பில் சணல் ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கிறது.
கொரோனா பாதிப்பால் பல்வேறு துறைகள் பின் தங்கினாலும், சணல் ஏற்றுமதி உச்சத்தை அடைந்தது. சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்பதால் ஐரோப்பாவில் சணல் சாகுபடி 400 சதவீதம் அதிகரித்து உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். மத்திய ஜவுளித்துறை இணைச் செயலாளர் சஞ்சய் சரண் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முடிவில் சணல் வாரிய இணை இயக்குனர் மஹாதேப் தத்தா நன்றி கூறினார்.