ஊட்டியில் கூட்டுறவு நிறுவனத்தில் ரூ. 45 லட்சம் முறைகேடு
ஊட்டியில் கூட்டுறவு நிறுவனத்தில் நடந்த, 45 லட்சம் ரூபாய் முறைகேடு குறித்து, கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.;
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் உள்ள, நீலகிரி கூட்டுறவு நிறுவனம் கட்டுப்பாட்டில் மாவட்டம் முழுவதும், 30க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன. 'கொரோனா' காலகட்டத்தில், ரேஷன் கடைகள், ஊட்டி பல்பொருள் அங்காடிக்கு பிற இடங்களில் இருந்து பொருட்கள் வாங்கி 'பேக்கிங்' செய்து விற்பனை செய்யப்பட்டது.
அப்போது, ஊட்டி கூட்டுறவு நிறுவனத்தில் பணிபுரிந்த விற்பனை பிரிவு ஊழியர் ரவி, முறைகேடு செய்துள்ளார்; பொருட்களை வினியோகம் செய்த பலருக்கு, இன்னும் பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை என உயர் அதிகாரிகளுக்கு புகார் வந்தது. தொடர்ந்து நடந்த ஆய்வின் போது, முறைகேடு நடந்திருப்பது உறுதியானது.
கூட்டுறவு நிறுவனத்தில் விற்பனை பிரிவில் நடந்த ஆய்வில், 45 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்தது தெரியவந்ததால், அங்கு பணிபுரிந்த ரவி என்பவர், சஸ்பெண்ட் செய்யப்பட்டு, துறை ரீதியாக விசாரணை நடந்து வருகிறது. மோசடி பணத்திற்காக, 30 லட்சம் ரூபாய், 15 லட்சம் ரூபாய் என, இரண்டு காசோலைகளை அவர் கொடுத்த நிலையில், அவை வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி உள்ளது. இது தொடர்பாகவும், கூட்டுறவு நிறுவனம் சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக, கூட்டுறவு நிறுவன நிர்வாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.