உதகையில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
உதகை, அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த கனமழையால் சாலையில் மழை நீர் வெள்ளம் தேங்கியது.
நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து உதகையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டும், அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்தது.
இதனைத்தொடர்ந்து, உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான லவ்டேல், மேல்கோடப்பமந்து, எல்க்ஹில் குமரன் நகர், தொட்டபெட்டா, சேரிங் கிராஸ், உதகை மத்திய பேருந்து நிலையம், எச்பி எஃப் உள்ளிட்ட பகுதிகளில் நீண்ட நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்தது.
சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த இந்த கனமழையின் காரணமாக உதகை நகரில் சாலையோரங்கள் மற்றும் நடைப்பாதைகளில் மழை நீர் சூழ்ந்து காணப்பட்டது.
இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் உதகையில் கடும் குளிருடன் கன மழை தொடர்ந்து பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.