பள்ளிக்கு புதிய கட்டிடம்: குறைதீர் நாளில் உதகை கலெக்டரிடம் கோரிக்கை
நீலகிரி மாவட்டம், கூடலூர் மரப்பாலம் பகுதியில் பழுதடைந்த பள்ளியின் மேற்கூரையை சரி செய்யக்கோரி மக்கள் மனு அளித்தனர்.
உதகையில், நீலகிரி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் கூடலூர் மரப்பாலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் செயல்படும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பள்ளி மேற்கூரை பழுதடைந்து இடிந்து விழுவதால் புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், மரப்பாலம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் 43 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் பள்ளி கட்டிடம் கடந்த 2003-ம் ஆண்டு கட்டப்பட்டது. அந்த கட்டிடம் தரமாக கட்டப்படாததால் மழைக்காலங்களில் கூரையின் மேல் நீர்தேக்கம், நீர் கசிவு ஏற்பட்டு வந்தது. தற்போது மேற்கூரை இடிந்து விழுந்து வருகின்றன.
கட்டிடத்தின் சுவரில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனால் கட்டித்தை இடிக்க கலெக்டர் வாய்மொழி உத்தரவின் படி மாணவர்களின் நலன் கருதி மாணவர்கள் மாற்றுகட்டிடம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மாணவர்கள் அருகே உள்ள பள்ளிக்கு சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் சென்று பயிலும் நிலை உள்ளது.
அந்த கட்டிடமும் பழுதடைந்து உள்ளது. இதனால் நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த முடியாத நிலை இருக்கிறது. மரப்பாலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.