உதகை: ரேஷனில் கொரோனா நிவாரண நிதி வழங்கிய ஆட்சியர்
உதகையில், ரேஷன் கடைகளில் பயனாளிகளுக்கு நிவாரண நிதி மற்றும் தொகுப்பு வழங்கும் திட்டத்தை, ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள கூட்டுறவு நிறுவன அங்காடியில், குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டாவது கட்ட கொரோனா நிவாரணம் வழங்கும் திட்டம் மற்றும் 14 வகை மளிகைப்பொருட்கள் வழங்கும் திட்டத்தை, மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, இன்று தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் உதகை சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில், தமிழக அரசு அறிவித்துள்ள இரண்டாம் கட்ட கொரோனா நிவாரண தொகை 2000 மற்றும் 14 வகையான மளிகை தொகுப்பு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது.
அதன் பின்னர், ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறும்போது, நீலகிரி மாவட்டத்தில் 402 நியாயவிலை கடைகளிலுள்ள 2,18,195 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவுள்ளது. இதில் முக்கியமாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கும், ரேஷன் கடை மூலமாகவே டோக்கன் மற்றும் நிவாரணத்தொகை, முதல் மூன்று நாட்களுக்குள் அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று வழங்கப்பட உள்ளது என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், கொட்டும் மழையை பொருட்படுத்தாமல், குடும்ப அட்டைதாரர்கள் நிவாரண நிதியையும் மளிகை தொகுப்பையும் பெற்றுச் சென்றனர்.