உதகை அப்பர் பவானி அணையை பார்வையிட்ட கவர்னர்
அணை பராமரிக்கப்படும் விதம், தேக்கி வைக்கப்படும் தண்ணீர், மின் உற்பத்தி ஆகியவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.;
அப்பர் பவானி அணை.
தமிழகத்தில் புதிய கவர்னராக பொறுப்பேற்று உள்ள ஆர்.என். ரவி 5 நாள் சுற்றுப்பயணமாக சென்னையில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகைக்கு நேற்று வருகை வந்தார்.
அவர் உதகை ராஜ்பவனில் தனது குடும்பத்தினருடன் தங்கி உள்ளார். இந்த நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு உதகை ராஜ்பவனில் இருந்து கவர்னர் ஆர்.என்.ரவி புறப்பட்டு மஞ்சூர் வழியாக அப்பர் பவானி அணைக்கு சென்றார். கவர்னர் தனது மனைவி லட்சுமி ரவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் 5 பேருடன் அப்பர் பவானி அணையின் இயற்கை அழகை கண்டு ரசித்தார்.
பின்னர் அணை பராமரிக்கப்படும் விதம், தேக்கி வைக்கப்படும் தண்ணீர் மின் உற்பத்தி செய்யப்படுவது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மலைப்பிரதேசமான நீலகிரியில் பெரிய அணையாக அப்பர்பவானி அணை உள்ளது. 210 அடி கொள்ளளவு கொண்டது. கடல் மட்டத்தில் இருந்து 7,470 அடி உயரத்தில் அமைந்து உள்ளது. அப்பர் பவானி அணையை பார்வையிட்ட கவர்னர், அங்கேயே தனது குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
தொடர்ந்து அங்கு மதிய உணவு அருந்தினார். பின்னர் அப்பர் பவானியில் இருந்து புறப்பட்டு வரும் வழியில் காரில் இருந்தபடி கோரகுந்தா, தாய்சோலை ஆகிய பகுதிகளில் இருந்த தனியார் தேயிலை தோட்டங்களை பார்வையிட்டார். பின்னர் மாலை கவர்னர் மீண்டும் உதகை ராஜ்பவனை வந்தடைந்தார்.