உதகையில் பெய்த கனமழையால் மருத்துவமனை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து சேதம்
உதகை அரசு மருத்துவமனை தடுப்புச் சுவர் மழையால் சேதமடைந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்படைந்தது.
உதகையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் உதகையில் அரசு தலைமை மருத்துவமனை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது இதில் அதிர்ஷ்டவசமாக வாகன ஓட்டிகள் உயிர் தப்பினர்.
உதகை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டு சென்றன. குறிப்பாக சேரிங் கிராஸ் பகுதியில் தாழ்வான இருந்த சாலைகளில் குளம் போல் தேங்கி நின்ற மழைநீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
மேலும் இந்த கனமழையால் உதகை அரசு தலைமை மருத்துவமனையில் 50 அடி நீளமுள்ள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஸ்டேட் பாங்க், மத்திய பேருந்து நிலையத்திற்குச் செல்லும் சாலையில் தடுப்புச்சுவர் விழுந்ததால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் ஜேசிபி மூலம் சாலையில் விழுந்த தடுப்புச்சுவரை அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
மருத்துவமனை பிரதான சாலையில் வாகனங்கள் நிறுத்துமிடம் அருகில் தடுப்புச்சுவர் விழுந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. வாகன ஓட்டிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் .