வெள்ளத்தில் மூழ்கிய விளை நிலங்கள்; உதகை விவசாயிகள் கவலை
உதகை அருகே உள்ள கிராமப் பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த மலைக்காய்கறிகள் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், உதகை அருகே முத்தோரை பாலாடா பகுதியில் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த காய்கறிகள் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கடந்த பத்து நாட்களாக உதகையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்பிடிப்பு பகுதிகளான அப்பர் பவானி, அவலாஞ்சி மதுரையில், எமரால்டு, குந்தா உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்நிலையில், உதகை அருகே முத்தோரை பாலாடா, நஞ்சநாடு, கோழிக்கறி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை காரணமாக தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த கேரட், பீட்ரூட், முள்ளங்கி முட்டைக்கோஸ் உள்ளிட்ட மலை காய்கறிகள் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், காய்கறிகள் மழை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
தொடர்ந்து கனமழை நீடித்து வருவதால் தோட்டங்களில் மழைநீர் தேங்கி மலை காய்கறிகள் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகளை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.