உதகை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பட்டாசு கடை வியாபாரிகள்
தீபாவளிக்கு 4 நாட்கள் மடடுமே உள்ள நிலையில் இதுவரை அனுமதி வழங்கவில்லை என வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பட்டாசு கடைகள் வைக்க இணையதளத்தில் பதிவு செய்தும் இதுவரை அனுமதி கிடைக்காததால் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டாசு கடை வியாபாரிகள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
2 மாதத்திற்கு முன்பு இணையதளத்தில் பதிவு செய்தவர்களுக்கு இதுவரை அனுமதி கிடைக்கவில்லை எனவும் 5 நாட்களாக ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து செல்வதாக கூறும் வியாபாரிகள் இன்று அதிகாலை முதல் தற்போது வரை எந்த அதிகாரியும் தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை என வேதனை தெரிவித்தனர்.
குறைந்தது தீபாவளிக்கு பத்து நாள் முன்னரே பட்டாசு கடைகள் வைக்க அனுமதி வழங்கும் நிலையில் தற்போது இதுவரை அனுமதி கிடைக்காததால் லட்சக்கணக்கான ரூபாய் செலவில் இறக்குமதி செய்யப்பட்ட பட்டாசுகள் வீணாவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பட்டாசு கடை திறக்க அனுமதி கிடைக்காததால் ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.